தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து எந்தவித முடிவும் இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் புதிய பாடப் புத்தகங்களில் மாணவர்கள் எளிதில் பாடக் கருத்துக்களை காணொலிக்கள் மூலம் படிக்க உதவும்படி க்யூ ஆர் கோடு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது.
இதனை கடந்த ஆண்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் அவர்களின் ஆண்ட்ராய்ட் செல்போன் மூலம் மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர்.
அதேபோல், பள்ளி மாணவர்களின் பாடங்கள் அனைத்தையும் ’தீக் ஷா’ செயலி மூலம் மாணவர்கள் காணொலி வடிவில் கண்டு பாடமாகப் படிக்கலாம்.
இந்நிலையில், கரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், மாணவர்கள் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பாடங்களைப் படிப்பதற்கான நடவடிக்கையையும், தீக் ஷா செயலி பயன்படுத்தி பாடங்களின் கருத்துக்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வித்துறை அலுவலர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.