12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. சவுதாம்டன் நகரில் நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தனர்.
தொடக்க வீரராக களமிறங்கிய ஹசிம் ஆம்லா ஆறு ரன்களுடனும், மார்க்ரம் ஐந்து ரன்களுடனும் பெவிலியனுக்கு திரும்பினர். இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி 7.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து 29 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிலேயே நிறுத்திவைக்கப்பட்டது.
டி காக் 17 ரன்களுடனும், கேப்டன் டூ ப்ளஸிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், தொடர்ந்து ஐந்து மணிநேரமாக மழை பெய்துவருவதால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதால் ஆட்டத்தைக் காணவந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்கனவே, தென்னாப்பிரிக்க அணி முதல்மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது இந்தப் போட்டி கைவிடப்பட்டதால், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவது சந்தேகம்தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னதாக, இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது.