உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 33ஆவது லீக் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில், அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த தொடரில் ஆறாவது முறையாக களமிறங்கியுள்ளது. இதன் மூலம், உலகக்கோப்பையில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் அணியை மாற்றம் செய்யாமல் களமிறங்கும் இரண்டாவது அணி என்கிற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணி 1999இல் இச்சாதனையை எட்டியிருந்தது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கப்தில் ஐந்து ரன்களோடு முகமது ஆமிர் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். சற்றுமுன்வரை நியூசிலாந்து அணி நான்கு ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை எடுத்துள்ளது. வில்லியம்சன் இரண்டு ரன்களுடனும், முன்றோ 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொடரில், தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே சந்தித்து வரும் நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்றால், அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அதேசமயம், உலகக்கோப்பையில், இவ்விரு அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டியில், பாகிஸ்தான் அணி ஆறு முறை வென்றுள்ளது. ஆனால், நியூசிலாந்து அணி இரண்டு முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.