தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'ஆறு மாதத்தில் இரண்டு லாக்கப் மரணங்கள்' - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு - custodian, death,

மதுரை: "மதுரையில் கடந்த ஆறு மாதத்திற்குள் இரண்டு லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. இதற்கு உரிய நியாயத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் வழங்க வேண்டும்" என்று, மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் வலியுறுத்தியுள்ளார்.

ஹென்றி டிபேன்

By

Published : Jul 2, 2019, 10:41 PM IST

மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘கடந்த 22ஆம் தேதி கரிமேடு அருகே ஆட்டோ நிலையத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மணிகண்டன் என்பவர், மதியம் 3.00 மணிக்குக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாதாரண 75ஆவது பிரிவில் வழக்குப் பதிவு செய்து 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார். மறுபடியும் ஆட்டோ நிலையம் செல்லும் அவரை மீண்டும் காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

தாக்கப்பட்டுள்ள மணிகண்டனைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோரை, வீட்டிற்கு அனுப்பி விட்டு, மறுபடியும் காலை வரச் சொல்லி, காய்ச்சல் காரணமாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் மணிகண்டன் இருப்பதாகச் சொல்லி, பார்க்கச் சொல்கிறார்கள். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த 300-க்கும் மேற்பட்ட காவலர்களை மீறி தங்கள் மகனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இறந்த நிலையில் தான் மகனைப் பார்க்கிறார்கள்.

பிணத்தை வாங்க மறுத்து, பெற்றோர்கள் கதற, இரவு மருத்துவமனை டீனோடு கை கோர்த்துக் கொண்டு, இரவோடு இரவாக உடற்கூறாய்வு நடத்தி, பழங்காநத்தத்தில் உள்ள வீட்டிற்குக் கூட உடலைக் கொண்டு செல்ல விடாமல், தத்தனேரி சுடுகாட்டிற்கு காவலர்கள் பாதுகாப்போடு சென்று கொண்டு உள்ளார்கள். ஆனால் காவல் நிலைய மரணத்தைத் தடுக்க வேண்டிய மேல் அலுவலர்கள், இதனை ஊக்குவிக்கிறார்கள். கீழுள்ள அலுவலர்கள் உதவி புரிகிறார்கள்.

செய்தியாளர்களுக்கு மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் பேட்டியளித்தபோது

இலவச சட்ட உதவி ஆணைக் குழு இது போன்ற வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். 24 மணி நேரம் ஒரு இளம் வழக்கறிஞரை, பயிற்சி பெற்ற வழக்கறிஞரை முழு நேர பணியில் அமர்த்த வேண்டும். கரிமேடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அனைத்து கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மதுரை ஆணையாளரை நம்பத் தயாரில்லை. ஐ.ஜி. ரேங்கில் இருக்கும் ஆணையாளர், துணை ஆணையாளர் அனைவரின் மீதும் சிபிசிஐடி விசாரணைக் கேட்டு டிஜிபியிடம் மனு அளிக்க உள்ளோம். இதை மக்கள் கண்காணிப்பகம் சும்மா விடாது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் இவ்வழக்கு குறித்தும், காவல் நிலைய மரணங்கள் குறித்தும் பேரவையில் விவாதிக்க வேண்டும்.

காவல் நிலைய அலுவலர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் என்பதனை உயர் அலுவலர்கள் அவ்வப்போது உணர்த்த வேண்டும். ஒரு உயிரை எடுப்பதற்குக் காவல் நிலைய அலுவலர்களுக்கு உரிமை இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details