கோவை மாவட்டத்தை அடுத்துள்ள அத்திக்கடவு பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 4ஆவது பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1100 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தற்போது பில்லூர் அணை பகுதியில் இருந்து திருப்பூர் வரை உள்ள சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீரைக் கொண்டு செல்ல வழிப் பாதைகளில் பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அன்னூரில் உள்ள பிரதான சாலை வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி மிக மந்தமாக நடைபெற்று வருவதால் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அன்னூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையிலும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அன்னூர் நகர் பகுதி முழுவதும கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.
மேலும், ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் அரைகுறையாக மூடப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் அந்த வழியாக செல்லக்கூடிய லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி அதன் சேற்றில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வழி வகுக்கிறது.