உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் முதலாவது இடத்தில் உள்ளது. அங்கு 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 472 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என 10 லட்சத்து 22 ஆயிரத்து 670 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 412 நபர்கள் 14 நாட்கள் முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். மீதமுள்ள 3 லட்சத்து 48 ஆயிரத்து 492 நபர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அறிய முடிகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று ஒரேநாளில் மட்டும் 15 மண்டலங்களில் 505 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள பகுதியான அண்ணா நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை திரு.வி.க.நகர் போன்ற இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
இந்த 506 மருத்துவ முகாம்களில் மொத்தம் 28 ஆயிரத்து 92 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஆயிரத்து 826 நபர்களிடம் தொற்று அறிகுறி தென்பட்டதால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்தப் பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூக செயற்பாட்டாளர்களும், தன்னார்வலர்களும் தங்களை இணைத்து பணியாற்றி வருகின்றனர். 15 மண்டலங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களை மாநகராட்சி ஆணையர் நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.