கொலை மிரட்டல்: காதல் ஜோடி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை: பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி காதல் ஜோடி பாதுகாப்புக் கேட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
![கொலை மிரட்டல்: காதல் ஜோடி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்! காதல் ஜோடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:19:56:1600177796-tn-tvm-02-couple-threatened-vis-7203277-15092020165821-1509f-1600169301-514.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கணிகிளுப்பை பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகள் ஜெயலட்சுமி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இவரும் அதே கல்லூரியில் படித்துவரும் ஆரணி அடுத்த காட்டேரி பகுதியைச் சேர்ந்த ரகுவும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஜெயலட்சுமி தனது காதல் விவகாரத்தை வீட்டில் கூறியுள்ளார். ஆனால், வீட்டில் காதலை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால் ஜெயலஷ்மி, ரகு ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 4ஆம் தேதியன்று சேத்துப்பட்டு அடுத்த அவனியாபுரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் மன்னார்குடியில் உள்ள ரகுவின் நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் ரகுவின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
ஆகவே காதல் ஜோடி தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கேட்டு புகார் மனு அளித்துள்ளனர்.