நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் இன்று (ஜூன் 16) நடைபெற்றது. இதில், 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். ஏலத்தில், அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக 12 விழுக்காடு ஈரப்பதம் உள்ள பகுதி பருத்தி குவிண்டாலுக்கு ஐந்தாயிரத்து 232 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய பருத்தி கழகம் அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் நாகை, திருவாரூர், விழுப்புரம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து வந்த தனியார் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர். அப்போது, குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 5,500 என்றும் குறைந்தபட்சமாக ரூ. 3,300 வரை விலை நிர்ணயம் செய்தனர்.
இந்திய பருத்தி கழகம் அலுவலர்கள் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ததாகவும், ஆனால் ஈரப்பதம், பருத்தியின் தரம் ஆகியவற்றை காரணமாக கூறி அரசு அறிவித்த ஆதார விலையை விட ரூ. 3,300 என்ற மிக குறைந்த விலையை தனியார் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் விற்பனைகக் கூட வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.