மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகி உள்ளது.
குறிப்பாக நேற்று (ஜூன் 21) ஒரே நாளில் மதுரையில் அதிகபட்சமாக 69 பேர் உட்பட 212 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசின் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை, இதுவரை மூவாயிரத்து 413 பேர் கரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைப் பெற்றுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்து 2015 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று (ஜூன் 21) வரை ஆயிரத்து 372 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன.