தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தேர்தலின்போது பணியாற்றிய அலுவலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கரோனா தொற்று அறிகுறிகள் குறித்துக் கண்டறியவும், பிற மாவட்டங்களிலிருந்து வந்துள்ளவர்களைக் கண்டறியவும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் 200 வீடுகளுக்கு ஒரு குழு வீதம் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில் சென்னை, பிற மாவட்டங்களிலிருந்து 125 நபர்கள் வந்திருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஊரகப் பகுதிகளில் சுகாதார அலுவலர்களுடன் நிலை அலுவலர்கள் இணைந்து சென்னை, பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டு, கடந்த இரண்டு நாள்களில் 338 நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் 70 நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் நகராட்சிப் பகுதிகளில் 91 நபர்களும், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 27 நபர்களும் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இப்பணிகளை மேற்கொண்டு கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும். தற்போது கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தொடர்புடைய குடும்பத்தார்கள், வெளித் தொடர்புகள் குறித்துச் சம்மந்தப்பட்ட வருவாய், சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
பிற மண்டலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உரிய இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எல்லைப்புற கிராமங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களின் விவரங்கள் குறித்து உள்ளாட்சி, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும்.
கடைகளில் தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதிசெய்திடவும், கைகழுவும் வசதி செய்திடவும், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்திடவும் வலியுறுத்த வேண்டும். இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8,108 நபர்களுக்கு முகக்கவசம் அணியாத காரணத்தால் ரூபாய் ஒன்பது லட்சத்து 82 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் முகக்கவசம் அணிவது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வாரம் இரு நாள்கள் முகக்கவசம் அணிவது குறித்து சோதனைசெய்து, அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்ப ராஜ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, பயிற்சி ஆட்சியர் அமித், அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.