தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான நீதி பால்ராஜ் என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கில், தூத்துக்குடி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீதிபால்ராஜின் அடக்கத்திற்கு பின்னரே அவருக்கு கரோனா தொற்று இருந்தது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் பீதியில் இருந்து வந்தனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நீதி பால்ராஜின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தாமாக முன்வந்து தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த சில நாள்களாக லேசான காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்த தூத்துக்குடி சட்டப் பேரவை தொகுதி எம்.எல்.ஏ கீதா ஜீவன் நேற்று தன்னை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.