கரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், வீடுகளில் தங்காமல் வெளியே சென்று வருவதாக மாநகராட்சி அலுவலர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
அவ்வாறு வெளியில் செல்லும்போது பிற நபர்களும் இந்த தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்று பாதித்து அறிகுறி இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே சென்றதாக இதுவரை 51 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் மீது தொற்று நோய் தடுப்புச்சட்டம், அரசு உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜூன் 12ஆம் தேதி 40 வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4 நாள்களில் மட்டும் 11 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு