கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 39வயது பொறியாளர் பெங்களுருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்று கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால், மனைவி, குழந்தையை காண தேனி வந்த பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி முகாமில் சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியில் இருந்த மென்பொருள் பொறியாளர் இன்று (ஆக.7) தனக்குத் தானே கழுத்து, கை ஆகியப் பகுதிகளை அறுத்துக் கொண்டு இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு மருத்துவர்கள், பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர்.
இதில் நல்வாய்ப்பாக அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. இருந்த போதிலும் 2ஆவது மாடியில் இருந்து குதித்ததில் அவரது இடது கால் முறிந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.