சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள கூவம் ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் திருவல்லிக்கேணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் கூவத்திலிருந்த சடலத்தை காவல் துறையினர் மீட்டனர்.
அதன்பின், உடற்கூறாய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன்(65) என்பது தெரியவந்தது.
அவருக்கு கடந்த 13ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதியாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பெற்று வந்த அவர், திடீரென்று கடந்த 15ஆம் தேதி யாரிடமும் கூறாமல் மருத்துவமனையிலிருந்து தப்பியோடினார்.
இது தொடர்பாக மருத்துவர் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய நபர் மீது ராஜீவ் காந்தி மருத்துவமனை காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தது தெரியவந்தது. தப்பியோடிய புருஷோத்தமன் மன உளைச்சலில் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் திருவல்லிக்கேணி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.