சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கைதான இருவருக்கு கரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
திருட்டு வழக்கு குறித்து விசாரணை செய்த காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட எட்டு காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் சேலம் நகர பகுதியில் 30 பேர், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் 10 பேர், புறநகர்ப்பகுதிகளில் சுமார் 22 பேர், அமெரிக்காவிலிருந்து சேலம் திரும்பிய 2 பேர், மாலத்தீவுகளிலிருந்து சேலம் திரும்பிய 3 பேர், விழுப்புரம் 8 பேர், சென்னை 3 பேர், மதுரை 3 பேர், தருமபுரி 3 பேர், செங்கல்பட்டு 3 பேர் என மொத்தம் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதேபோல ராஜஸ்தான் 7 பேர், கேரளம் 7 பேர், மகாராஷ்டிரா 7 பேர், மத்தியப் பிரதேசம் 7 பேர், தில்லி 7 பேர் உள்பட 25 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 111 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.