கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிவருகிறது. மேலும், கரோனா பரவலைத் தடுக்கும்பொருட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான சிறு, குறு கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசு அறிவுரையின்படி வெப்பமானி கருவி, கிருமிநாசினி பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் கரோனா தொற்று சற்று அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா எனச் சுகாதாரத் துறை மற்றும் பெருநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த வகையில் இன்று (ஏப். 23) காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையிலுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் நகராட்சி, சுகாதாரத் துறை ஊழியர்கள் பூ கடைகள், உணவகங்கள், சிறு, குறு கடை என ஒவ்வொரு கடையாகச் சென்று திடீர் ஆய்வுமேற்கொண்டனர்.