தூத்துக்குடி தாமோதர நகர் பெருமாள் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய அவருக்குத் தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டுவந்துள்ளார்.
இந்த நிலையில் சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல் அவருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர் தன்னையும் கரோனா பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரின் ரத்தம், சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. சோதனை முடிவில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உள்பட அவரது குடும்பத்தினர்கள் மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தூத்துக்குடி தாமோதர நகர் பெருமாள் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு, மாநகராட்சிப் பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். தற்சமயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 114 பேர் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய தினம் (ஜூன் 13) தூத்துக்குடியில் கரோனாவுக்கு சிவில் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.