தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தேனி கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவருக்கு கரோனா

தேனி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவந்த கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்துவந்த பயிற்சி மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona infection for doctor
Corona infection for doctor

By

Published : Jun 21, 2020, 5:05 AM IST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டுவருகிறது. சுகாதாரம், மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் என 10 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றிவருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்துவந்த 34 வயதுடைய பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து தாமாகவே முன்வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். முடிவில் பயிற்சி மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கட்டுப்பாட்டு அறையிலிருந்த அனைத்துப் பணியாளர்களும் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அறை மூடப்பட்டது. மேலும் தூய்மைப் பணியாளர்கள் கொண்டு கிருமிநாசினி மருந்து தெளித்து கட்டுப்பாட்டு அறை சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்துவந்த அனைத்து அலுவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இது குறித்து கட்டுப்பாட்டு அறை அலுவலர் ஒருவர், “மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததில் மருத்துவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

பாதிக்கப்பட்ட மருத்துவர் இரவுப் பணியில் இருந்ததால் அவர் மூலம் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. மேலும் அவர் தனி அறையில் செயல்பட்டுவந்தார். அவருடன் யாரும் நெருங்கிய தொடர்பில் இல்லை. இருந்தபோதிலும் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள உள்ளோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details