ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கமலா ரைஸ் மில் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றிவந்தார்.
அவருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனால் அவர் பணியாற்றிய ஜவுளிக்கடையில் கரோனா பரிசோதனை செய்ததில் எட்டு நபர்களுக்கும் மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அக்கடையில் பணியாற்றிய 150க்கும் மேற்பட்டவர்களை கோபி கலைக்கல்லரியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அப்பெண் குடியிருந்த கமலா ரைஸ்மில் வீதியில் 25 வீடுகளில் உள்ள 80க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பெண் சிகிச்சை பெற்று குணமடைந்து நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பெண் தனக்கு கரோனா தொற்று இல்லை என்றும் நோய் தொற்று இல்லாமலேயே சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
அதனால் கமலா ரைமில் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் கரோனா தொற்று இல்லாத நிலையில் தங்களை ஏன் தனிமைப்படுத்தியுள்ளீர்கள் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீதியை விடுவிக்கவேண்டும் என்று கோரியும் தடுப்புகளின் அருகில் வந்து இங்கு காவலுக்கு இருந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகலறிந்து கிராம நிர்வாக அலுவலர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் விளக்கம் அளித்தனர். அப்போது பாதிக்க்பட்ட பெண்ணே தனக்கு தொற்று இல்லை என்று கூறியுள்ளதாகவும் அதனால் தங்கள் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு கரோனா தொற்று இல்லாமல் ஒருவரை அழைத்துச்சென்று சிகிச்சையளிக்கமுடியுமா என்று அலுவலர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், மாவட்ட நிர்வாகத்தினர் உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய காலத்தில் மாவட்ட அலுவலகத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களின் நலன் கருதியே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் ஆதரவளித்து, ஒத்துழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சட்ட விரோத மது விற்பனை கடைகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி