உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் முதலாவது இடத்தில் உள்ளது. அங்கு 84 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 404 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று மட்டும் 15 மண்டலங்களில் 506 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.