கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, கரூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தனியார் பேருந்துகள், வேன்கள், கார்கள் இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கடந்த 4 மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் முழுமையாக முடங்கியுள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையில் இன்று(ஜூலை 20) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பழகனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அதில் ”ஊரடங்கால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களாகிய எங்களுக்கு, மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரண உதவிகளை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் தொழில் பாதித்துள்ள அனைத்து வாகனங்களுக்கும், இந்த அறையாண்டிற்கான சாலை வரியை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். பிற நலவாரிய உறுப்பினர்களுக்கு அறிவித்ததுபோல், அறியாமையால் நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு செய்திராத ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கு அரசு உதவித்தொகை அறிவித்திட வேண்டும்.
மேலும், வாரியங்களில் உறுப்பினராவதற்கு சிறப்பு முகாம் நடத்தி, அனைவரும் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும். கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வரும் தனியார் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு முன்வர வேண்டும்" என, அதில் கோரிக்கை வைத்துள்ளனர்.