மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி உதவி பெண் மேலாளர் கடந்த 3 நாள்களாக காய்ச்சல், சளி இருந்ததால், பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி உதவி பெண் மேலாளருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் வங்கியில் இருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், வங்கி உதவி மேலாளருக்கு கரோனா உறுதியானதால், சுகாதாரத் துறை அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி, வங்கி வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுவதாகவும்; வங்கியின் அருகிலுள்ள தானியங்கி பணம் எடுக்கும் மையமும் மூடப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
பொதுமக்கள் வங்கியின் அவசரத்தேவைக்காக, மதுரை திருநகரில் உள்ள வங்கிக் கிளையை அணுகுமாறு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கி கிளை உதவி மேலாளர் தென்காசியைச் சேர்ந்தவர் என்பதும்; இவர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில்கூட வெளியில் எங்கும் செல்லாத நிலையில் இவருக்கு கரோனா தாக்கியதும் வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் உட்பட மதுரையில் இன்று(ஜூன் 18) ஒரே நாளில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊர்களின் ஆங்கிலப் பெயரை மாற்ற வெளியிட்ட அரசாணை திடீர் ரத்து!