தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பிரேசில் அணியின் வெற்றிக்கு உதவிய ஜீசஸ்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், பிரேசில் அணி பொனால்டி ஷூட் அவுட் முறையில் பாராகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

பிரேசில் அணியின் வெற்றிக்கு உதவிய ஜீசஸ்

By

Published : Jun 28, 2019, 7:30 PM IST

பிரேசில் - பாராகுவே:

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டியில் நட்சத்திர அணியான பிரேசில் அணி, பாராகுவே அணியை எதிர்கொண்டது.

கோலின்றி முடிந்த போட்டி:

இதைத்தொடர்ந்து, பிரேசில் அணி இப்போட்டியில் பந்தை தன்வசப்படுத்தியே ஆடியது. இதனால், பிரேசில் அணி வீரர்கள் பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கினாலும், அதை கோலாக மாற்ற முடியாமல் திணறினர்.

அதேசமயம், பாராகுவே அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், அதே பிரேசில் அணியின் டிஃபெண்டர்கள் தடுத்தனர். இறுதியில் இந்த போட்டி கோலின்றி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

ரசிகர்களை நுனி சீட்டில் அமர வைத்த பெனால்டி ஷூட் அவுட்:

இதைத்தொடர்ந்து, இப்போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக இரு அணிகளுக்கும் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதன்படி, முதலில் பாராகுவே சார்பில் அந்த அணியின் வீரர் குஸ்டாவோ கோமெஸ் (Gustavo Gomez) அடித்த பந்தை, பிரேசில் கோல் கீப்பர் அலிசன் (Alisson) சிறப்பாக தடுத்தார். இதைத்தொடர்ந்து, பிரேசில் அணி சார்பில் வில்லியன், மார்கினோஸ், கொடினோ ஆகியோர் வரிசையாக கோல் அடித்தனர். ஆனால், நான்காவது பெனால்டி கிக்கை அடிக்க வந்த ஃபிர்மினோ பந்தை கோலாக மாற்ற தவறினார்.

அதேசமயம், பாராகுவே அணி முதல் கிக்கை தவறவிட்டாலும் அடுத்த மூன்று பெனால்டி கிக்கையும் கோலாக்கியது. இதனால், இரு அணியும் 3-3 என்ற சமநிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, கடைசி கிக்கை, பாராகுவே வீரர் டெர்லிஸ் கான்ஸாலெஸ் (Derlis Gonzalez) வீணாக்கியதால், பிரேசில் அணி தனது கடைசி பெனால்டி கிக்கை கோலாக மாற்றினால், இப்போட்டியில் வெற்றிபெறும் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பிரேசில் அணியின் கடைசி கிக்கை அடிக்க அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் கெப்ரியல் ஜீசஸ் வந்தார்.

இதனால், மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களும் போட்டியில் என்ன நடக்கும் என தங்களது சீட்டின் நுனி பகுதிக்கு வந்தனர். கடைசி கிக்கை, எந்த வித பதற்றமுமின்றி ஜீசஸ், பாராகுவே அணியின் கோல்கீப்பரை ஏமாற்றி கோல் அடித்ததால், பிரேசில் அணி 4-3 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் த்ரில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

பிரேசில் - பாராகுவே

ABOUT THE AUTHOR

...view details