ராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பில் புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, " தமிழ்நாடு அரசு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இம்மீன்பிடி இறங்கு தளமானது சுமார் 500 விசைப்படகுகளை நிறுத்திட ஏதுவாகவும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சேமித்து வைத்திட ஏதுவாக குளிர்பதன சேமிப்புக் கிடங்கு வசதிகள், சாலை வசதி, மீன் ஏலக்கூட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படுகிறது.