ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனை கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனி சிறப்பு வார்டிலும்; அவரது மனைவியும், கைக்குழந்தையும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கு கடந்த இரண்டு நாள்களாக மருத்துவர் வருவதில்லை எனவும்; தேவையான பால், நல்ல தண்ணீர், உணவு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் அப்பெண் செல்போனில் காணொலிப் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் முதலமைச்சருக்கு அனுப்பி தெரிவித்திருந்தார்.
இந்தக் காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் நேற்று (ஜூலை 2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.