திண்டுக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 498 ஹெக்டேர் அளவில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் உதவியுடன் தென்னை அதிகம் பயிரிடக்கூடிய 20 மாவட்டங்களில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையான குவிண்டால் ஒன்றுக்கு ஒன்பது ஆயிரத்து 960 ரூபாய் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நத்தம் மற்றும் வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் கொள்முதல் மையங்கள் ஜூன் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
மேலும், விவசாயிகள் கொண்டு வரக்கூடிய கொப்பரை தேங்காயின் ஈரப்பதம் 6 விழுக்காட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும் என தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரு விவசாயிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 191 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும். மேலும் விவசாயிகள் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலையும் கொள்முதல் மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.