கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை அமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ். இவர்களை விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த வியாபாரிகள் மீது காவலர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இரண்டு பேரும் மரணமடைந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காலதாமதமாகும் பட்சத்தில் கொலையாளிகள் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை, தடயங்களையும் அழித்து இல்லாமல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
எனவே மக்களின் உணர்வுகளை மதித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும், பொதுமக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாமல் இருக்கவும் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.