திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த தம்பதிக்கு 12 வயதில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகள் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அன்று சிறுமியின் தாய் கூலி வேலைக்குச் சென்றுவிட்டார்.
அவரது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது எதிர் வீட்டில் இருந்த கிருபானந்தம் (19) என்ற இளைஞரும், அவரது நண்பர்கள் டார்வின் சிங், ஜெயப்ரகாஷ் ஆகியோரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இதையடுத்து, மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் மூக்கில் மின்கம்பியை திணித்து கொலைசெய்துள்ளனர்.
இது தொடர்பாக வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் கிருபானந்தம் மட்டும் கைதுசெய்யப்பட்டார்.
இதனிடையே, இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (செப். 29) திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில், போதிய சாட்சிகள் இல்லாததால் கிருபானந்தம் விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதி புருஷோத்தமன் அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்திலேயே குழந்தையின் தாய் மயக்கமடைந்தார். தொடர்ந்து எனது குழந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கதறி அழத் தொடங்கினார்.
இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தத் தீர்ப்பு குறித்து ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வனஜா பேசுகையில், "கிருபானந்தம் கொடுத்த வாக்குமூலத்தில் நான்தான் பாலியல் வல்லுறவு செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளான்.
இதற்கு, மேல் என்ன சாட்சி தேவைப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என எல்லா துறைகளிலும் மகளிர் உள்ள ஒரு மாவட்டத்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி இல்லை என்பது வெட்கக்கேடானது.
இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களை தைரியமுடன் செய்யத் துணியவைக்கும். மேலும் சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய இந்த நீதிமன்றம் இந்த அவமானகரமான தீர்ப்பையும் வழங்கியுள்ளதை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம்.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம்" என்று கூறினார்.