திருவண்ணாமலை மாவட்டத்தில் வெறையூர், அழகானந்தல், வைப்பூர், கீழ்பென்னாத்தூர், வேடந்தவாடி ஆகிய ஐந்து ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை பொதுப்பணித்துறை மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் 3.84 கோடி ரூபாய் செலவில், 433 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை மத்திய பெண்ணையாறு வடிநில வட்ட பொறியாளர் என்.சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், ”இத்திட்டத்தின் மூலம் இந்த ஐந்து ஏரிகளிலும் இரண்டு மதகுகள் புதுப்பித்தல், மூன்று கலிங்கல் புதுப்பித்தல், ஏரிக்கரையை பலப்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வரத்துக் கால்வாய் சரி செய்தல், ஏரியின் எல்லைகளை அளந்து எல்லைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.