தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா அதிதீவிரமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸ் பொதுமக்கள் மட்டுமின்றி கரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் என அனைவரையும் தாக்கியுள்ளது.
இதில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் துறையினர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் இன்று கரோனா பாதிப்படைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள, மயிலாப்பூர் காவல் மாவட்டம், D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.ஆர்.பிள்ளை தெருவிற்குச் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கரோனா தொற்று குறித்து எடுத்துரைத்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
பின்னர், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெக்ஸ் தெருவில் ஆய்வு செய்து, அங்கு பணியிலிருந்த காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தது மட்டுமின்றி, கரோனா வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாப்புடன் பணிபுரியுமாறும் அறிவுரைகள் வழங்கினார்.