தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குதிரை படத்துடன் காரணவர் கல்வெட்டு கண்டுபிடிப்பு! - விருதுநகரில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

விருதுநகர்: குதிரை படத்துடன் காரணவர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

காரணவர் கல்வெட்டு
காரணவர் கல்வெட்டு

By

Published : Oct 5, 2020, 10:28 PM IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூர் கண்மாயில் சிதறிக் கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் செ.ரமேஷ், த.ஸ்ரீபால் ஆகியோர் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.

மேலும் அந்தக் கண்மாயில் சிதறிக் கிடப்பவை, கோயில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள ஜகதி, குமுதம், யாளிவரி ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும். இதில் ஜகதியில் இரண்டும், குமுதத்தில் ஒன்றுமாக மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ள இக்கல்வெட்டுகள் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரிய வந்துள்ளது.

குமுதத்தின் உடைந்த கல்லில் உள்ள 4 வரி கல்வெட்டில் நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுள்ளது. எனவே இவ்வூர் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறியமுடிகிறது. இதில் வருள்வாசகநல்லூர் எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது. இது திருவருள்வாசகநல்லூராக இருக்கலாம்.

ஜகதியில் இருந்த இரு துண்டுக் கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் என்பவர் பெயரும், அஞ்சு நிலையூர்க்கு சமைந்த காரணவர் பெயரும், அடுத்ததில் வெண்கலம் பறித்து மண்கலம், சுபமஸ்து ஆகிய சொற்களும் காணப்படுகின்றன. இதில் காரணவர் பெயருக்குக் கீழே குதிரையின் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.

காரணவர், படைக்காரணவர் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் படை வீரர்கள் ஆவர். இக்கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டிருப்பதன் மூலம் அவர்களை குதிரைப்படை வீரர்களாகக் கருதலாம். அஞ்சு நிலையூர் காரணவர்கள் இவ்வூர் கோயிலுக்கு தானம் வழங்கி இருக்கலாம். அருப்புக்கோட்டை, இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி, திருமோகூர் ஆகிய ஊர்களில் இருந்த காரணவர் பற்றி கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது. படைவீரர்களுக்குத் தானமாக மன்னர்கள் வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர்.

கல்வெட்டில் சொல்லப்படும் அஞ்சு நிலையூர் மதுரை அருகிலுள்ள நிலையூராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம், நரிப்பையூர் உள்ளிட்ட சாயல்குடியின் கடற்கரைப் பகுதியிலும், அருப்புக்கோட்டை, மதுரையிலும் காரணமறவர்கள் என்பவர்கள் தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details