இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் வினோத்குமார் பிரசாத் என்பவர் டெல்லி காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். திடீரென ஜூன் 5ஆம் தேதி உடல்நிலை மோசமாகி, இருமலுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது வினோத்குமாருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. பின்னர் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் மூச்சுத் திணறல் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஜூன் 9) உயிரிழந்தார். இந்நிலையில் துணை ராணுவம், மத்திய ஆயுதக் காவல் படைகளில் (சிஏபிஎஃப்) கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 2.5 லட்சம் பணியாளர்கள் கொண்ட இந்தப் படையில் மொத்தம் 535 பேருக்கு கரோனா வைரஸ் பாதித்திருந்தது, அவர்களில் 435 பேர் மீண்டுள்ளனர்” என்றார்.