தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மக்களவைத் தேர்தல்: நங்கூரமிட்ட பாஜக

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

namo

By

Published : May 23, 2019, 5:36 PM IST

Updated : May 23, 2019, 5:41 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்றுள்ளது. இந்த முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மோடி ஆட்சியில் இடதுசாரிகள், பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர். பணமதிப்பிழப்பால் சிறு தொழில் செய்பவர்களும், அடித்தட்டு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்கள் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டிலும் பல்வேறு பிரச்னைகள், இந்தியா முழுவதும் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க நினைக்கிறது பாஜக என சமூக செயற்பாட்டாளர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்துவந்தனர்.

பாஜக ஆட்சி அமைக்க வடமாநில மக்களே காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றார்போல் மத்தியப் பிரதேசத்தில் 28 இடங்கள், ராஜஸ்தானில் 25 இடங்கள், குஜராத்தில் 26 இடங்கள், உத்தரப் பிரதேசத்தில் 60 இடங்கள், பிகாரில் 37 என பாஜகவை அம்மாநில மக்கள் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

தென்னிந்தியாவில் பாஜக எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறப்பட்ட போதிலும், கர்நாடகாவில் பெரும்பான்மையோடு 25 இடங்களில் வெற்றி கண்டுள்ளது.

அதேபோல் புல்வாமா தாக்குதலுக்கு மோடி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் என மக்கள் பலரும் நம்புவதால், இந்திய நாட்டின் பாதுகாப்பை மனதில் கொண்டு பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்கள் என பொது வெளியில் கருத்து நிலவுகிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களை பிடித்திருப்பது ஆச்சரியத்தையும், அதே வேளையில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரம் பாஜகவுக்கு சாதகமாக செயல்படும்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதியப்பட்ட வாக்குகளோடு ஒப்புகைச் சீட்டு பதிவுகள் பொருந்தினால்தான் இந்த வெற்றி குறித்து கூறமுடியும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்படி பல குற்றச்சாட்டுகள் இருந்தும் பாஜகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கவுள்ள பாஜக, இனியாவது நல்லாட்சியைத் தருமா இல்லை இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடரும் வண்ணம் செயல்படுமா என பொறுத்திருந்து பார்ப்போம் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது.

Last Updated : May 23, 2019, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details