உலகக்கோப்பையில் வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வார்னர் 166, உஸ்மான் கவாஜா 89 ரன்களை விளாசினர்.
இதைத்தொடர்ந்து, 382 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய வங்கதேச அணி, ஸ்டார்க், பெட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல் போன்ற மிரட்டலான ஆஸி. அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.
குறிப்பாக, ஷகிப்-அல்-ஹசன் 40 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினாலும், தொடக்க வீரரான தமிம் இக்பால், விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்ஃபிகுர் ரஹிம், ஆல்ரவுண்டர் மஹ்மதுல்லாஹ் ஆகியோர் சிறப்பாக ஆடினர். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படத் தொடங்கினார்கள்.
ஓவருக்கு ஓவர் ஒரு பவுண்டரி அடித்து மிரட்டினார்கள். இருப்பினும், தமிம் இக்பால் 62 ரன்களில் ஆவுட் ஆனாலும், மஹ்மதுல்லாஹ், முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் தொடர்ந்தது போராடினர். இருப்பினும் வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி ஆறு ஓவரில் 93 ரன்கள் தேவைப்பட்டன. இந்த தருணத்தில், அதிரடியாக ஆடிய மஹ்மதுல்லாஹ் 69 ரன்களில் அவுட் ஆனார்.
இதனால், வங்கதேச அணியின் தோல்வி உறுதியானது. பின்னர், கடைசி ஓவர் வரை நின்று ஆடிய முஷ்ஃபிகுர் ரஹிம் சதம் விளாசினார். இறுதியில் வங்கதேச அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்களை எடுத்தது. இதனால், இப்போட்டியில் வங்கதேச அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும், வங்கதேசம் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிமான ரன்களை குவித்தது சாதனை படைத்தது.