சேலம் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன.
இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, தில்லை நகர், பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாநகராட்சிப் பணியாளர்கள், தடைசெய்யப்பட்ட பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்துவருகின்றனர்.
இதேபோல சேலம் மாநகரில் இன்று கல்லாங்குத்து, கங்கா நகர் உள்ளிட்ட மொத்தம் 48 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு மருத்துவக் குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
கரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரத் துறை மருத்துவக் குழுவினர், அந்தந்தப் பகுதிகளிலேயே மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.