இது தொடர்பாக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, "அஸ்ஸாம் மாநிலத்தின் தீ விபத்தைக் கண்டிருக்கும் ஆயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயு கிணற்றால், திப்ருகார் மாவட்டமே பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் அம்மாநில அரசு தவித்து வருகிறது.
அது போல் காவிரி டெல்டா குடியிருப்பு பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் பற்றி எரியத் தொடங்கினால், அதன் பேரழிவு நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு இருக்கும். எனவே, அந்த பேராபத்தை உணர்ந்து டெல்டா பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கும் ஓ.என்.ஜி.சி கிணறுகளை உடனடியாக மூடவேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா விவசாயப் பகுதிகளில் எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகளை அமைப்பதை நிரந்தர தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் உள்நோக்கத்தோடு கடன் வழங்க மத்திய அரசு தடை விதித்திருப்பதை நீக்க வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பழைய நிலையிலேயே கடன் கொடுக்க அனுமதிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். அதற்கு விவசாயிகள் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.