உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், டவுன்டனில் நடைபெற்று வரும் 17ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கேப்டன் ஃபின்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 146 ரன்களை சேர்த்த நிலையில், முகமது ஆமிர் பந்துவீச்சில் கேப்டன் ஃபின்ச் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களில் நடையைக் கட்டினாலும் மறுமுனையில், சிறப்பாக ஆடிய வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 15ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து ஆடிய அவர் 107 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 37.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து 242 ரன்களை எடுத்திருந்தது. வார்னரைத் தொடர்ந்து வந்த ஷான் மார்ஷ், உஸ்மான் கவஜா, அலெக்ஸ் கெரி, மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் ஆமிரின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் அமீர் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 10 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே வழங்கி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.