சென்னை தேர்வுத் துறை இயக்குநராகப் பணியாற்றிவருபவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்குமார். கடந்த ஜுன் மாதம் ஆறாம் தேதி இவருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மறுநாள் காலை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
தொடர் சிகிச்சைக்குப் பிறகு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். ஜூலை மாதம் ஒன்றாம் தேதி மருத்துவர் தினத்தில் தனக்கு மருத்துவம் வழங்கிய மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை எழுதினார்.
அவர் எழுதிய கடிதத்தில், “கடந்த மாதம் ஆறாம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். ஏழாம் தேதி காலை வந்த பரிசோதனை முடிவில் எனக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். செவிலியர் தங்கும் அறைகள் கரோனா சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டு, அங்கு எனக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. நான் சிகிச்சை பெற்ற அறை நல்ல காற்றோட்டமாகாவும் சுத்தமாகவும் இருந்தது.