இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவருமான கோமதி மாரிமுத்து, வரும் மே மாதம் 2023ஆம் ஆண்டு வரை தடகளப்போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை செய்யப்படுவார் என்றும்; கடந்த ஆண்டு இரண்டு மாத காலப்பகுதியில் அனைத்துப் போட்டிகளில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்றும் தடகள ஒருமைப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், அனபோலிக் ஸ்டீராய்டு நாண்ட்ரோலன் (anabolic steroid nandrolone) இருந்தது, 'பி’ மாதிரியிலும் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தடை அறிவிப்பு வெளியானது.
இதனால் கடந்தாண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரையிலான, இவரது சாதனைகள் சாதனைப் புத்தகத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. கோமதியின் போட்டி முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அவரின் பதக்கங்கள், பட்டங்கள், தரவரிசைப் புள்ளிகள், பரிசு, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவுள்ளன.
கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றபோது, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அவருக்கு பண உதவிகள் வழங்கின. அவரது சாதனையை சமூக ஊடகங்கள் கொண்டாடின. இருப்பினும், ஒரு ஆண்டு கழித்து, கோமதிக்கு ஏற்பட்டுள்ள ஊக்கமருந்து சர்ச்சையானது, அவரது அனைத்து பரிசுகளையும் தற்போது பறித்துள்ளது. மேலும், நான்கு ஆண்டுகள் அவர் போட்டியில் கலந்துகொள்ளத் தடை விதித்துள்ளது.
முன்னதாக தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், சீனாவின் ஆசிய விளையாட்டு சாம்பியன் வாங் சுன்யு, இரண்டு முறை ஆசியப்போட்டியில் வென்றவரான கஜகஸ்தானைச் சேர்ந்த மார்கரிட்டா முகாஷேவா ஆகியோரை வீழ்த்தி, அப்போட்டியில் தங்கம் வென்றார், கோமதி மாரிமுத்து.
மேலும், பெண்கள் 800 மீட்டர் போட்டியில் ஒரு இந்தியர் தங்கம் வென்றது இதுவே முதல் முறை. இந்நிலையில் கோமதி மாரிமுத்து மீது ஊக்கமருந்து புகார் எழுப்பப்பட்டு, அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.