திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த சூரியந்தாங்கல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
சூரியந்தாங்கல் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 300 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். அதே கிராமத்தில் 15 குடும்பத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் வசித்துவருகின்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிண்டல் செய்வதும், தனியாகச் செல்லும்போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதும், மதுபோதையில் ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபடுவதுமாக இருந்தனர்.
இதனைத் தட்டி கேட்பவர்களைத் தாக்கியும் பெண்களை இழிவாகப் பேசியும் சமூக விரோதச் செயலில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனசேகர் என்ற மாணவன் ஏடிஎம்மில் இருந்து ரூபாய் 28 ஆயிரம் பணம் எடுத்து வந்துள்ளார்.
அப்போது, அவர் எடுத்து வந்த பணத்தை குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பிடிங்கிக்கொண்டு, பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதிக்கு வந்து வீடுகளையும் சூரையாடி அடித்து துன்புறுத்தி ஜாதி பெயரை சொல்லி இழிவாகப் பேசி வாகனங்களை உடைத்து, இருசக்கர வாகனத்தை திருடிச்சென்று மதுபோதையில் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 16 பேர் மீது வேட்டவலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் பிணையில் வெளியே வந்த 16 பேரும் மீண்டும் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வந்து ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டுவது, ஒருமையில் பேசுவது, பெண்கள் தனிமையில் இருக்கும்போது இழிவாகப் பேசுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இதனால், கடந்த இரண்டு மாத காலமாக பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க மறுத்துவருவதாக பட்டியலின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வேட்டவலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே பலமுறை புகார் மனு அளித்தும், புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.