சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் காணொலி மூலம் தேசிய மீன் வளர்ப்போர் தின கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை ஒட்டி மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் பங்கேற்ற அவர்கள் இதற்கு நல்ல வரவேற்பு அளித்தனர்.
கடல் பாசி பல்வேறு வகையான மருத்துவக் குணம் கொண்டது, மகளிர் சுய உதவிக்குழு மூலம் அவற்றை வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில், மூன்று தவணையில் மீனவர்களுக்கு ரூபாய் 102 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு லட்சத்து 21 ஆயிரம் மீன்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உற்பத்தியை அதிகரிக்க பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சசிகலா சிறையில் இருந்து வெளிவருவது குறித்து கைத்தறித்துறை அமைச்சர் கூறியுள்ளது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம்.
ஆனால், கட்சியின் நிலைப்பாடு என்பது நேற்று, இன்று, நாளை என என்றுமே ஒன்றுதான். அதிமுகவில் ஒரு சிலரை தவிர(சசிகலா) யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்.