தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா எதிர்ப்பு போரில் உயிரிழந்த பெண் செவிலியர்! - தலைமை பெண் செவிலியர் தங்கலட்சுமி

சென்னை : சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட்-19 சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்துவந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

கரோனா எதிர்ப்பு போரில் உயிரிழந்த பெண் செவிலியர்
கரோனா எதிர்ப்பு போரில் உயிரிழந்த பெண் செவிலியர்

By

Published : Jun 14, 2020, 9:37 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் இதுவரை 42 ஆயிரத்து 687 பேர் பாதிக்கப்பட்டும், 397 உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோவிட்-19 பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரும் தற்போது கரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர்.

குறிப்பாக, சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையின் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த தலைமைப் பெண் செவிலியர் தங்கலட்சுமி (52) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். குணமடைந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு மீண்டும் மருத்துவ பணியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு மீண்டும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலேயே செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூன் 14) மாலை அவர் உயிரிழந்தார். அவரது உடல் சுகாதாரத்துறை விதிகளின்படி மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவக் கடமையாற்ற வந்த பெண் செவிலியர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கரோனா எதிர்ப்பு போரில் ஈடுபட்டு வந்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த 75 மருத்துவர்கள், செவிலியர்கள் கடும் பாதிப்படைந்த நிலையில் சென்னை அயனாவரம் சி.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details