உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் இதுவரை 42 ஆயிரத்து 687 பேர் பாதிக்கப்பட்டும், 397 உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், மாநில அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 1756 பேர் பாதிக்கப்பட்டும், 17 உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தின் முக்கிய பகுதியான மணவாளன்நகரைச் சேர்ந்த நாமதேவர் (80) அவரது மனைவி ராணி அம்மாள் (72), மகன் நந்தகோபால் (55) மருமகள் மஞ்சுளா (50), பெயரன் திவாகர் (28) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் கடந்த வாரம் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் போதிய இடம் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததை அடுத்து தண்டலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஐவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கே தீவிரச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மிகவும் குன்றியிருந்த ராணி அம்மாள் (72) இன்று (ஜூன் 14) காலை உயிரிழந்தார்.
கரோனா பாதிப்பால் ராணி அம்மாள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளன்நகர் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் துப்புரவாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டு வருவது கவனிக்கத்தக்கது.