தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான மையங்களை திறப்பதற்கும் அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
அங்கு மூன்று மாத காலம்தான் சீசன். இப்போது அங்கு குளிப்பதற்கும், தங்குவதற்கும் அனுமதி அளிக்கவில்லை என்றால் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
குற்றாலத்தில் கடை வாடகை என்பது 456 விதியின்படி செயல்படுத்த வேண்டும். சில அலுவலர்கள் 70, 80 விழுக்காடு என தான்தோன்றித்தனமாக வாடகையை உயர்த்தி, வியாபாரிகளை பாதிக்கும் உள்நோக்கத்தோடு, அரசை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செயல்படுவதாக நாங்கள் அறிகிறோம்.