கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த இருசாளகுப்பத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் நிழற்குடையில் உட்புறம் அம்பேத்கர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. நேற்று (ஜூன் 22) இரவு பேருந்து நிறுத்தத்தில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர் ஓவியத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சாணியால் அடித்து அவமதித்தும், ஆங்காங்கே இடித்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்பேத்கர் ஓவியத்தை அவமதித்தவர்களை கண்டுபிடிக்குமாறு பேருந்து நிறுத்த நிழற்குடை முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இது பற்றி அறிந்த காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்பு அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் இந்த சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆய்வாளர் உறுதியளித்தார். அதனடிப்படையில் பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து அம்பேத்கர் படத்தை அவமதித்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, இருசாளகுப்பம் முகாம் செயலாளர் மாய.வீரப்பன் ஆகியோர் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அம்பேத்கர் பட்டியலின மக்களின் தலைவர் என போலியான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருப்பதால், பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மோதல் வரும்போதெல்லாம் அம்பேத்கர் சிலைகள் தாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.