மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது. இதன் காரணமாக இந்திய அளவில் தமிழ் மொழியில் மேற்கொள்ளும் ஆய்வுகளில் தொய்வு ஏற்பட்டதால் அதன் இயக்குநர் பதவியிடத்தை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்ப்பேராசிரியர் சந்திரசேகரன் ஈரோடு மூலப்பாளையம் நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தமிழ்ச்சங்கம், பழங்குடிகள், சங்ககால இலக்கியத்தில் தமிழ் மொழி என பல்வேறு ஆராய்ச்சிக்களை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டத்தைப் பெற்றவராவார். தமிழில் பல்துறை நூல்களை பல்வேறு தலைப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரின் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், தேசிய மற்றும் மாநில அளவில் தமிழ் மொழியில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அதேபோல் இந்தியா உள்பட வெளிநாடுகளில் தமிழ் மொழி குறித்த சிறப்புச் சொற்பொழிவுகளையும் ஆற்றி தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்துள்ளார்.