தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

CWC 19: நியூசிலாந்து பந்துவீச்சில் சுருண்ட ஆஃப்கானிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து

டவுன்டான்: நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

CWC 19: நியூசிலாந்து பந்துவீச்சில் சுருண்ட ஆஃப்கானிஸ்தான்

By

Published : Jun 8, 2019, 10:44 PM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டவுன்டான் நகரில் நடைபெற்று வரும் 13ஆவது லீக் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து பலப்பரீட்சை செய்து வருகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹஸரதுல்லாஹ், நூர் அலி சட்ரான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்போட்டியின் மூலம் நூர் அலி சட்ரான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இவ்விரு வீரர்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாகவே எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்த நிலையில், ஹஸரதுல்லாஹ் 34 ரன்களில் ஜேம்ஸ் நீஷம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் விளாசிய ஹஷ்மதுல்லாஹ் ஷஹிதி

அவரைத் தொடர்ந்து, நூர் அலி சட்ரான் 31 ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினார். இதன் பின்னர், களமிறங்கிய வீரர்கள் நியூசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஷம், லோக்கி ஃபெர்குசன் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனிடையே, நான்காவது வரிசையில் களமிறங்கிய ஹஷ்மதுல்லாஹ் ஷஹிதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 99 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்த அவர், தனது விக்கெட்டை கடைசியாக இழந்தார். இதனால், ஆஃப்கானிஸ்தான் அணி 41.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம்-5, லோக்கி ஃபெர்குசன்- 4 என விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ABOUT THE AUTHOR

...view details