மும்பை: தன்னுடைய 1.16 விழுக்காடு பங்குகளை ரூ.5 ஆயிரத்து 683 கோடிக்கு ஏஐடிஏ வாங்கியதாக ரிலையன்ஸ் ஜியோ தகவல் வெளியிட்டுள்ளது.
ஜியோ இயங்குதளங்களில் இந்த முதலீடுகள் பங்குச்சந்தை மதிப்பீட்டில் ரூ.4.91 லட்சம் கோடி எனவும், அதன் நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தில் கடந்த ஆறு வாரங்களாகப் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துவருகின்றன. இதுவரையில் உலக அளவிலான முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.97 ஆயிரத்து 885 கோடி ஜியோவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், 21.06 விழுக்காடு பங்குகள் விற்கப்பட்டுள்ளன.
ஜியோவில் முதலீடு செய்த எட்டாவது நிறுவனம் அபுதாபி நிறுவனமாகும். முன்னதாக, ஃபேஸ்புக், முபாடாலா, விஸ்டா பாட்னர்ஸ், கே.கே.ஆர்., ஜென்ரல் அட்லாண்டிக், சில்வர் லேக் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. உலக அளவில் தொடர்ச்சியாக அதிகளவிலான முதலீட்டைப் பெறும் நிறுவனமாக ஜியோ உள்ளது.