கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கால் டாக்ஸி ஓட்டுநர் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள், காரில் செல்கின்றனர் என சேலம் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், சூரமங்கலம் உதவி ஆணையர் நாகராஜன் உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கார் ஒன்றை வழிமறித்து, அதில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்களுக்கு கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதும், அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து காரில் வந்த பெரம்பலூர் ஆடுதுறை விமல்ராஜ், மேட்டுப்பாளையம் குமார், சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பாலாஜி, கார்த்திகேயன் ஆகிய 4 பேரை சூரமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் விமல்ராஜ் என்பவர் கூலிப்படை தலைவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது 15 கொலை வழக்குகள் இருப்பதும், 8 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் சண்முகசுந்தரத்தை கடத்திவந்து, சேலம் மாவட்டம் சங்ககிரி மலைப்பகுதியில் கொலை செய்து எரித்துவிட்டு, அதற்கு பயன்படுத்திய காரை ஆந்திராவில் விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.