தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை பால் முகவர்களாக நியமித்த ஆவின் நிறுவனம்! - Aavin employs auto and taxi drivers as milk agents

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை பால் முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமித்துள்ளது.

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை பால் முகவர்களாக நியமித்த ஆவின் நிறுவனம் !
ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை பால் முகவர்களாக நியமித்த ஆவின் நிறுவனம் !

By

Published : Jul 24, 2020, 4:35 AM IST

இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட் - 19 பரவல் பேரிடர் காலத்தில் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

தற்போது நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரோனா காலத்திற்கு முன்பு முகவர்களாவதற்காக வைப்பு தொகை ரூ.10,000/- இருந்த நிலையில், தற்போது வைப்புத் தொகை ரூ.1,000/-ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளது. இதன் மூலமாக 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000/- பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்பு தொகையாக செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை பெருநகர மாநகரத்திற்கு ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளரிடம் (விற்பனை) வைப்பு தொகையினை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம். இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மாதம் சுமார் ரூ.15,000/- குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்திகொள்ள வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளது

ABOUT THE AUTHOR

...view details